Thursday, March 5, 2015

சீக்கிரமா வந்துவிடு

இங்கிட்டு நான் இருக்க
அங்கிட்டு நீ இருக்க
பொங்கிட்டு வரும் ஆசையைத்தான்
எங்கிட்டு நான் பங்கு வைக்க?

குளத்தங்கரைப் படிக்கட்டில்
சிலையாட்டம் குந்திவிட்டேன்
சில வார்த்தை உன்கிட்ட
சிரிச்சி நான் பேசினாத்தான்
உசுரு இருக்குதுன்னு என்
உடம்புகூட நம்பும்
உடனடியா வந்துவிடு

உன் நெத்தியிலே வச்சி விட
பொத்திவச்ச திருநீறு
உள்ளங்கையில் ஊறிப்
பசையாட்டம் ஒட்டிடிச்சி.
அசையாம வச்ச கையி
வெளங்காமப் போயிடும்னு
வெசனமா இருக்குதய்யா
வெரசா நீ வந்துவிடு

சாயங்காலம் ஆயிடிச்சி
சொர்ணக்கிளி காணமின்னு
சிறுக்கி ஆத்தா
சித்தப்பனை ஏவுமுன்னே
சீக்கிரமா வந்துவிடு
சிரிச்ச முகம் காட்டுறேன்.

2 comments:

மோகன்ஜி said...

கிராமத்துக் கவிதையொண்ணு கண்சிமிட்டிப் பார்க்குதையா.

கிணத்தடி குளத்தங்கரை
காதல்பல பார்த்ததையா.

சிக்காத வார்த்தையெல்லாம்
சீறிவரும் வரப்போரம்

சின்னப்பொண்ணு சிரிப்பினிலே
சீவனிங்கு கரைஞ்சிபோகும்.

மோ.சி. பாலன் said...

மிக்க நன்றி மோகன்ஜி