Tuesday, December 31, 2013

நம்மாழ்வார் ஐயா

நம்மாழ்வார் ஐயா...நீங்க
மண்ணெல்லாம் திரிஞ்சி
மண்ணுக்குள்ள போனதேனோ?

அப்பன் பாட்டன் பூட்டன்
சேத்து வச்ச சொத்தையெல்லாம்...
உசுரோடு - காத்து வந்த சொத்தையெல்லாம்
சர்க்காரு பேச்சக் கேட்டு சொத்தையா ஆக்கிப் புட்டோம்.
சக்கரையா இனிக்கிற எம் மண்ணை
சக்கையா ஆக்கிப் புட்டோம்
எதுக்கும் ஒதவாத மண்ணு எதுக்குன்னு நாங்க
பல்லைக்கூட பேஸ்டு வெச்சு வெளக்கிப்புட்டோம்

"பயிரைச் சோக்காளியாக்க
மண்ணைச் சீக்காளியாக்காதே"
ஐயா நீங்க அறிவுரையா சொன்னீரு..
ரெண்டு அறை விட்டுச் சொல்லலியே..
பெரியவங்க சொன்ன பேச்சு
அவுங்க போன பெறகுதான் கேக்குமோ?

பள பளன்னு ஜொலிக்கிற பலவித காய் வகைய
ஜிலு ஜிலுன்னு குளுர வெச்சி
செல நாளு போன பின்னே
சூடு பெட்டியில வெச்சிச் சுட வெச்சித் தின்னுறோம்.
ஐயா நீங்க கல்லெறிஞ்சி, கனி பறிச்சி, கடிச்சித் தின்னீரு..
நாங்க கப்பலுல வரவழச்சிக் கட் பண்ணித் தின்னுறோம்

"ஏம்பா ஒரு பூச்சி கூட தின்னாத
மருந்து போட்ட எல தழைய கீரையென்று தின்பாயா?"
ஐயா நீங்க பொட்டில் அடிக்கிறமாதிரி கேட்டாலும்
எங்க புத்தியில ஒறைக்கலியே..

எங்க பாட்டன் பூட்டனப்போல்
இந்த மண்ணுக்கு உரமாத்தான் போனீரோ?
மண்ணில் மக்கி ஒரு வேப்பமரமா வேகமா வாருமையா..
இன்னும் இங்க பல பேருக்குப் பேயோட்ட வேணும்.

Tuesday, December 24, 2013

தனிமை

என் கெடும் முறை பற்றி உனக்கென்ன கவலை
உன் விடுமுறை தான் உனக்கு முக்கியம்
போய் வா.

அடித்த இரையை இழுத்துச் செல்வதுபோல்
என் இதயத்தை நீ இழுத்துச் செல்வது புரிகிறதா?
நீ ஊர் ஊராய்ச் செல்கையில்
ஏதோ தரையில் புரளும் புடவை முந்தானை என்று
தவறாய் நினைத்துவிடாதே.

ஆவி பறக்கும் ஆரத்தித் தட்டைப்போல்
இருவருக்கும் தேநீர் ஏந்தி வந்த நினைப்பில்
தனியொரு காபியை தூக்கிச் சென்றால்
உணவகத்தில் ஊரென்னைக் கேவலமாய்ப் பேசாதா?

பக்கத்தில் திரும்பி திரும்பி பேசி நடந்த வழக்கொழித்து
நேராய்ப் பார்த்து நடக்கையில் எனக்கு கழுத்து வலிக்குதடி.
என் தோளில் தொங்கும் கணினிப்பை
நீ கைவைத்து இழுப்பதுபோல் அழுத்தத்தைக் கொடுக்குதடி

எதிலும் சேராமல் என்னை ஒரு தனிமமாய்
ஆக்கிவிட்டது இந்தத் தனிமை

உன்போல் மையிட்ட கண்களிருந்தால்
என் தனிமையை அழுது அழுது எழுதியிருப்பேன்
என் தனிமையை எழுத தனி மை வேண்டுமடி

என் கெடும் முறை பற்றி உனக்கென்ன கவலை
உன் விடுமுறை தான் உனக்கு முக்கியம்
போய் வா.

Monday, December 16, 2013

தனிமையில் கட்டுடைத்து

இதய வீட்டுக்குள் நுழைந்தது நீ...
உட்புறமாய்த் தாளிட்டதும் நீ....
வரவேற்பறையினில், விருந்தினரின் தோரணையில்,
அளவான புன்னகையுடன்,
அமர்ந்துவிட்டாய் அசைவின்றி.
நானோ, பண்பாட்டு விலங்கிட்டு
கைகட்டிக் கைதியாய் நிற்கின்றேன்.
நேரம் செல்லச் செல்ல
ஏதோ ஒரு அச்சம் பெருகுகிறது---
பூட்டிய இதய வீட்டின்
தனிமையில் கட்டுடைத்து
திடீரென......
அழுதுவிடுவார்களோ
இன்னும் முதிராத
நம் காதல் குழந்தைகள்?

Monday, December 9, 2013

கண்ணனின் கனவு

படுத்தவுடன் தூங்கிவிடும் பாக்கியம் எல்லோருக்கும் வாய்ப்பதில்லை. அப்படிப்பட்ட சில பாக்கியவான்களில் கண்ணனும் ஒருவன். “எடுத்தது கண்டார் இற்றது கேட்டார்” என்பது போல், கண்ணன் படுப்பதைப் காண்பவர்கள் உடனடியாக அவன் குறட்டைச் சத்தத்தைக் கேட்பார்கள். ஆனால் குறட்டைச் சத்தத்துடன் கிக் ஸ்டார்ட் ஆகும் கண்ணனின் உறக்க வாகனம் விரைவிலேயே அவனைக் கனவுலகத்தில் கொண்டு போய் விட்டுவிடுகிறது பெரும்பாலான நாட்களில்.

கனவுலகம் ஏனோ ஒரு விசித்திர உலகமாகவே இருக்கிறது கண்ணனுக்கு. இப்படிச் சொல்வதனால் இந்தக் கனவுகள் ஏதோ பேய்க்கனவுகள் என்றோ, எதிர்மறை நிகழ்வுகள் நிறைந்தவை என்றோ பொருளல்ல. தன் வாழ்வில் இதுவரை சஞ்சரித்தில்லாத புதிய ஊர், தெரு, வீடு, இதுவரை சந்தித்திராத புதிய மனிதர்கள், கேட்டிராத புதிய சம்பாஷணைகளென்று கனவில் வரும் எந்த ஒரு பரிச்சயமில்லாத விஷயமும் இவன் மனதைச் சம்ஹாரம் செய்துவிடுகின்றன. ஆச்சரியங்களை விரும்பாதவர்களும் இருப்பார்கள் என்பது ஆச்சரியமாய் இருக்கிறதல்லவா? என்ன செய்வது? ஆச்சரியங்களை விரும்பாததால் தான் கண்ணன் கனவுகளை வெறுக்கிறான்.

கண்ணனுக்கு மகிழ்ச்சி தரும் கனவுகள் என்று எதுவும் கிடையாதா? அவனுக்குக் கனவுக்கன்னி என்று யாரும் கிடையாதா? என்று கேள்விகள் எழுகின்றன அல்லவா? மகிழ்ச்சியான கனவுகளும் அவ்வப்போது அவனுக்கு வந்திருக்கின்றன என்றாலும் பெரும்பாலானவை தூக்கம் கொல்லிகளாகவே அமைந்துவிடுகின்றன. கண்ணனுக்கும் காதல் உண்டு. அழகிய காதலி உண்டு. ஆனால் பாருங்கள். கனவுக்கன்னியாக இருக்கவேண்டிய அவள் வெறும் நினைவுக் கன்னியாகவே இருக்கிறாள். ஓரிரு கனவுகளில் அவள் வந்திருக்கிறாள் என்றாலும் அக்கனவுகளில் எள்ளளவும் காதல் ரசம் இருந்ததில்லை. ஒரு கனவில் காதலியின் பாட்டி செத்துக் கிடக்கிறாள். அழுக்கு உடையணிந்து மூக்கைச் சிந்தும் கோலத்தில் காதலியைப் பார்க்கவே சகிக்காமல், பாட்டிக்கு மரியாதை செலுத்திவிட்டு சட்டென்று வெளியேறிவிடுகிறான் கண்ணன். இன்னொரு கனவிலோ ரொம்பவும் சின்ன வயசுப் பெண்ணாக வந்து தொலைக்கிறாள் காதலி. இத்தனைக்கும் இந்தக் கனவில் சின்னப் பெண்ணான அவளை இழுத்தணைத்து முத்தமிட்டும் விடுகிறான் கண்ணன். ஆனால் அதில் காதல் உணர்வு இருக்கமுடியுமா? நீங்களே சொல்லுங்கள்.

"கனவு காணுங்கள்", "கனவு மெய்ப்பட வேண்டும்" என்ற கலாம் மற்றும் பாரதியின் கூற்றுகளில் கண்ணனுக்குத் துளியும் உடன்பாடில்லை. வள்ளுவன் நல்ல எண்ணங்கள் வேண்டும் என்று சொல்கிறானே தவிர, நல்ல கனவுகள் வேண்டும் என்று எந்தக் குறளிலும் சொன்னதாய்க் கண்ணனுக்குத் தெரியவில்லை. இடையில் வந்த யாரோதான் எண்ணங்களுக்கு மாற்றாகக் கனவு என்ற வார்த்தையைப் புகுத்தியிருக்க வேண்டும். அப்துல் கலாம் அவர்களின் கனவுகளில் ஒருமுறையாவது ஏவுகணைச் சோதனை தோல்வியில் முடிந்திருக்கும், பாரதியின் கனவில் வெள்ளைக்காரன் அவரைத் தூக்கில் போட்டிருக்கவும் வாய்ப்பிருக்கிறது என்பது கண்ணனின் வாதம். பாரதியை இனி கேட்க முடியாது. அப்துல் கலாமைச் சந்திக்கும் வாய்ப்பு உங்கள் யாருக்கேனும் கிடைத்தால் இந்தக் கேள்வியைக் கேட்டு அவரது பதில் என்னவென்று கண்ணனிடம் சொல்லிவிடுங்கள்.

இப்படியெல்லாம் கனவை வெறுக்கும், கனவைத் துளியும் நம்பாத கண்ணனுக்குள் இன்று அதிகாலை வந்த கனவு ஒரு புதிய மாற்றத்தை ஏற்படுத்திவிட்டது. சென்ற வருடம் இதே நாளில் இறந்துபோன தாத்தா அவன் கனவில் வந்தார். அவன் வாயைத் திறக்கச் சொன்ன தாத்தா அவனிடம் முகம் பார்க்கும் கண்ணாடியைக் கொடுத்து "கண்ணா உன் நாக்கைப் பாருடா" என்றார். "நாக்குல கருப்பா பெரிய மச்சம் இருக்கு.. தெரியுதா?" என்றார். "தாத்தா.. எனக்கு நாக்குல மச்சம் கிடையாது" என்ற கண்ணனைப் பொருட்படுத்தாத அவர், “கண்ணா இனி நீ சொல்லும் ஒவ்வொரு வார்த்தையும் பலித்துவிடுமடா.. எதைச் சொன்னாலும் யோசித்துச் சொல்லு.." என்று சொல்லி விட்டு ஒரு பெரிய ஒளிவெள்ளத்தில் சட்டென்று மறைந்துவிட்டார். இதுபோன்றதொரு பிரகாசத்தைக் கண்ணன் என்றுமே கண்டதில்லை. கோடி சூர்யப் பிரகாசம் என்று இதைத்தான் சொல்வார்களோ? தாத்தாவின் வடிவில் தரிசனம் தந்தது எந்தத் தெய்வமாயிருக்கும் என்று யோசித்தான்.

தூக்கம் கலைந்ததால் எழுந்து குளியலறைக்குச் சென்றவன் முகத்தை அலம்பினான். நீரின் குளிர்ச்சியையும் மீறி கொட்டாவி வந்தது. கண்ணாடியைப் பார்த்தவன் அதிர்ந்துபோனான் .. தாத்தா சொன்னதுபோல் அவன் நாக்கில் பெரிய மச்சம் ஒரு ரூபாய் நாணய அளவில் இருந்தது. இது எப்படி சாத்தியம் என்று ஒரு நிமிடம் திகைத்துவிட்டான்.

நினைவுகளில் துழாவிப் பார்த்தவனுக்கு சட்டென்று புலப்பட்டது - நேற்று இரவு தான் சாப்பிட்ட பான் கறையாக இது இருக்கக்கூடும் என்று.
ஆனாலும் கண்ணன் மனம் தெளிவடையவில்லை. வெற்றிலைக் கறை என்பதோ மச்சம் என்பதோ தெய்வ அருளின் பூடகமான ஒரு குறியீடு மட்டுமே என்ற மாற்றுச் சிந்தனை தோன்றியது. தான் மிகவும் நம்பும், மதிக்கும் தாத்தா கனவில் சொன்ன வாக்கை அவனால் புறக்கணிக்க முடியவில்லை.

ஒரு சிறிய நிகழ்ச்சி ஒரு மனிதனின் எண்ண ஓட்டத்தை முற்றிலும் திசைமாற்றி விடமுடியுமா என்ற ஆச்சரியத்துடன் மீண்டும் முகத்தில் நீரை அறைந்தான்.

முகத்தைத் துண்டால் துடைத்து ஒரு நிமிடம் கண்களை மூடி யோசித்தவன், மெதுவாய் இமைகளைத் திறந்து கண்ணாடியில் தெரியும் தன் பிம்பத்தைப் பார்த்துத் தெளிவான குரலில் சொன்னான்:

"என் தம்பி இனிமேல் குடிப்பதை நிறுத்திவிடுவான்".

அடங்காத புரவி ஒன்றை அடக்கி அதன் மேலேறி நிதானமாய் அதைச் செலுத்திவரும் ஒரு வீரனின் பெருமிதமான அதே சமயம் சாந்தமான ஒரு உணர்வைக் கண்ணாடியில் அவன் பிம்பம் வெளிப்படுத்தியது.

Saturday, November 16, 2013

எசப்பாட்டு

நேற்று தொலைக்காட்சி சேனல்களை மாற்றும் போது ஏதோ ஒரு சேனலில் கமல்ஹாசனின் பம்மல் கே சம்பந்தம் படம் ஓடிக்கொண்டிருந்தது .. "கந்தசாமி, மாடசாமி..." பாடலை கமல் பாடிக்கொண்டிருந்தார்.

பக்கத்தில் அமர்ந்திருந்த என் வால் பொண்ணு உடனே அந்தப் பாட்டுக்கு எசப்பாட்டு பாடத் தொடங்கினாள்.."கந்தசாமி, மாடசாமி, டேரன் சாமி...!"

வீடு

குழந்தைகளுக்குக் கூடு
மனைவிக்குக் கூண்டு
கணவனுக்கும் கூண்டு
அதாவது..
குற்றவாளிக் கூண்டு

Saturday, October 26, 2013

விநாயகா நின்னு வினா ப்ரோச்சுடகு

நானும் என் மகனும் தற்போது கற்றுக்கொண்டிருக்கும் மேற்படி கீர்த்தனையைப் பின்பற்றி கீழ்க்கண்ட பாடலை எழுதியுள்ளேன். இது நேரடி மொழிபெயர்ப்பன்று. கீர்த்தனையின் பொருளும் எனக்குத் தெரியாது. இந்தத் தமிழ் வடிவம் எவ்வாறு உள்ளது என்று உங்கள் கருத்துக்களை அறிய ஆவல்.

விநாயகா நின்னை
வினாடியும் மறவேன்
வீரம் அருள்வாய்
வெற்றி தருவாய்

அனாதை இல்லை நான்
நீயே காப்பாய்
ஆதரித்து என்னை
நல்லிடம் சேர்ப்பாய்

பரமேச நேச பார்வதி புதல்வா
பாலசுப்ரமண்யன் பாடலில் முதல்வா
கரி முக கண நாயகா
கரி முக கண நாயகா
கரி முக கண நாயக குண நாதா

காதலோடு என்னைக்
காவல் செய் வா வா

விநாயகா நின்னை
வினாடியும் மறவேன்
வீரம் அருள்வாய்
வெற்றி தருவாய்

Saturday, August 17, 2013

கொசுவும் நானும்

போர்வையின் விலகலைப்

பறை சாற்றியது

வெளியேறிய பாதக் கொலுசொலி.…

எஞ்சியிருந்த இருட் போர்வையையும்

விலக்கி, வெள்ளிக் கொடி படர்ந்த

கணுக்கால் வெளியை

மேய்ந்து கொண்டிருந்தது

திரைச்சீலை ஒழுகிய ஒளி...

மின்சாரம் குடித்து

போதையில் சுழன்று கொண்டிருந்தது

உன் குழற்கற்றையை

அசைத்த குதூகலத்தில்

மின்விசிறி...

உன் இளஞ்சூட்டு ரத்தத்திற்கு

என்னைப் போலவே

ரீங்காரமிட்டுக் கொண்டிருந்தது

தொடுவதா வேண்டாமா

என்ற சிந்தனையில் கொசு...

Tuesday, July 30, 2013

UKG பிரார்த்தனை

எனது நண்பரின் மகன் UKG படிக்கிறான். அவன் LKG படிக்கும்போது "குரு பிரம்மா .. குரு விஷ்ணு" என்ற பாடலைப் பள்ளியில் சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள். எந்தக் கோயிலுக்குப் போனாலும் சாமியின் முன் நிற்கும்போது இந்தப் பாடலை சத்தமாகப் பாடுவது அவன் வழக்கமாம். பலரும் குழந்தை பாடுவதைப் பாராட்டுவார்களாம். இந்த வார இறுதி நண்பர் குடும்பத்துடன் திருவண்ணாமலை சென்றிருக்கிறார். கடவுளின் முன் கை கூப்பிய சிறுவன் சத்தமாகப் பாடத் துவங்கினான்.. "அறம் செய விரும்பு ஆறுவது சினம் இயல்வது கரவேல் ஈவது விலக்கேல்..." எல்லோர் முன்னாலும் வெட்கமாகிவிட்டது நண்பருக்கு..இந்த நான்கு வரிகளுக்குள் அவன் பாடலை நிறுத்திய நண்பர், "கண்ணா இது சாமி பாட்டு இல்லப்பா" என்றாராம். "எங்க miss புதுசா சொல்லிக் குடுத்தாங்கப்பா.. நான் சாமி பாட்டுன்னு நெனச்சுட்டேன்.. இது என்ன பாட்டுப்பா?" என்றானாம் குழந்தை. எனக்கென்னவோ இந்த நான்கு வரிகளும் இறைவன் முன் வைக்க வேண்டிய சரியான வேண்டுதல்களாகவே தோன்றுகின்றன. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

Saturday, July 20, 2013

வாலி

வாலி...

முடிவில்லாத பாதையில்

உனது பயணம் முடிந்தது.



சயனித்தது உனது உடல்

பயணித்தது உனது உயிர் - என்றாலும்

மௌனிக்காதது உனது மொழி.



கான்கிரீட் தரையில் படிந்த

கால் தடங்களாய்

ஆயிரம் ஆயிரம் பாடல்கள் தந்தவேனே.

உனது மீளாத் துயிலுக்கு

நான் பாடும் தாலாட்டு-

லாலி.. லாலி.. வாலி.

பொண்ணு

பொண்ணு,

உனக்கு முதன் முதலில் நான் வைத்த செல்லப் பெயர் பொண்ணு என்பது உனக்கு நினைவிருக்கிறதா? இரண்டு சுழி "ன" போட்டாலும் மூன்று சுழி "ண" போட்டாலும் இந்தப் பெயர் உனக்குக் கச்சிதமாகப் பொருந்துகிறது.

நாளை நமக்குத் திருமணம்.... என் மனைவியான உனக்கு உன் காதலனாக நான் எழுதும் ஒரே கடிதம் இது.

நமது நிச்சயதார்த்ததுக்கும் திருமணத்துக்கும் இடையிலிருந்த இந்த ஆறு மாதங்களை நமக்குத் திருமணமான நாட்களாகவே நான் கருதுகிறேன். நீயோ, பெண்ணென்ற பாதுகாப்பு வளையத்திலிருந்து இவற்றை நம் காதல் மாதங்களாகக் கணக்கிடுகிறாய்.

“ஜோசியக் காரன் இதைவிட நல்ல நாள் கிடையாது என்கிறான்...” “கல்யாண மண்டபம் கிடைப்பது குதிரைக் கொம்பாக இருக்கிறது..” என்பதான காரணங்கள் கூறி நம் கல்யாணத்தைப் பெரியவர்கள் தள்ளிப் போட்டபோது, காய்ந்த காளையான எனக்கு பெருத்த ஏமாற்றமாகத்தான் இருந்தது. ஆனால் இப்போது பார்க்கும்போது இந்த ஆறுமாத "arranged" காதல் மிகவும் அருமையாகத் தான் இருந்திருக்கிறது.

இந்த ஆறு மாத காலத்தில் தான் நீ என்னைவிட வெண்மையானவள் மட்டுமல்ல என்னை விட உண்மையானவள் என்பதைப் புரிந்து கொண்டேன்.

இந்த ஆறு மாத காலத்தில் தான் உனது அன்பின் ஆழத்தை அறிந்து கொண்டேன். ஊடல் நாளொன்றில் என்னிடம் கோபித்து "போங்க... உங்ககிட்ட இனி பேசமாட்டேன்" என்றதும் நான் பதைத்துப் போனேன். "இன்னும் ரெண்டு நாளைக்கு எனக்குப் போன் பண்ணாதீங்க" என்ற போதுதான் புரிந்தது என்னோடு பேசாமால் உன்னால் இரண்டு நாட்கள் கூட இருக்க முடியாது என்று.

உனது கைக்குட்டையில் நீ எம்பிராயிடரி செய்திருந்த சிறு பூக்களைப் பார்த்த பின்புதான் உனது கலையுணர்வும் அழகுணர்வும் எனக்குப் புரிந்தது. கல்யாண நகை வாங்க நமது பெற்றோர்களுடன் கடைக்குச் சென்று திரும்பும்போது பெற்றோர்களை முன்னால் நடக்கவிட்டு உன்னிடமிருந்து கைக்குட்டையைப் பறித்து வந்தது நினைவிருக்கிறதா? நீ செய்த பூக்களினால் அந்தக் கைக்குட்டை ஒரு காதல் சின்னமாகி நான் certificate-கள் வைக்கும் பெட்டிக்குள் பத்திரப்படுத்தப்பட்டுள்ளது!

அவ்வப்போது நாம் தேனீர் அருந்தும் சரவணபவன் வாசலில் ஒருநாள் "எனக்கு பஞ்சு மிட்டாய் வாங்கிக் கொடுங்கள்" என்று சொன்னபோது தான் நான் கண்டேன் இந்தக் குமரிக்குள் தவழும் குழந்தை!

கல்யாணத்துக்கு முன்பே (பிரம்மச்சாரியாய் இருக்கும் போதே!) சபரி மலைக்குச் சென்று வரவேண்டும் என்று நான் சென்று வந்தபோது நீ கேட்டாய். "ஐயப்பனிடம் என்ன வேண்டி வந்தீர்கள்?". "என் கண்மணி கேட்கும் வரத்தை அருள்வாய் ஐயப்பா" என்று நான் வேண்டியதைச் சொன்ன போது நீ நம்பினாயா என்று தெரியவில்லை. இப்போதும் சொல்கிறேன் இதுதான் நான் இறைவனிடம் வேண்டுவது. என் நண்பன் சொன்னான் "அடப் பாவி.. தசரதன் மாதிரி வரம் கொடுத்து மாட்டிக்கொள்ளப் போகிறாய்". அவனிடம் சொன்னேன்; உன்னிடமும் சொல்கிறேன், நான் தசரதன் போல் நல்ல கணவனாய் இருக்கவே விரும்புகிறேன்.

இறைவன் தருவது இருக்கட்டும் நீ என்ன தருவாய் என்று கேட்கிறாயா?

"உனது வாய் மொழிக்கு என் செவி தருவேன்
உனது இதழில் என்றும் நகை தருவேன்
உனது தலை சாயத் தோள் இரண்டு தருவேன்
நனையாத தலையணை நான் தருவேன்
இருக்கும் வரையில் என்னைத் தருவேன்
இல்லாத போதும் என் நினைவு தருவேன்"

கவிதையின் மிகைகளை மீறி என் எழுத்துக்களில் ஒளிந்துள்ள உண்மை உனக்குப் புரியும் என்று நம்புகிறேன்.

எல்லாம் நன்றாகத்தான் போய்க் கொண்டிருக்கிறது என்று நாம் நினைக்கும் நேரத்தில்தான் இறைவன் அவன் லீலையைக் காட்டினான் அல்லவா? திருமணத்துக்கு ஒரு மாதம் கூட இல்லாதபோது திடீரென எனக்கு முதுகுவலி அதிகமாகி மருத்துவமனையில் படுக்கும்படி ஆகிவிட்டதே. Disc Prolapsed ஆகியுள்ளது. பத்து நாளைக்கு traction போடவேண்டும் என்று டாக்டர் சொன்னபோது நான் மிகவும் பதறிப் போனேன்". வலி அதிகமாக இருந்ததால் நிற்கவும் முடியவில்லை உட்காரவும் முடியவில்லை.. திருமணத்தைத் தள்ளிபோட வேண்டிய சூழ்நிலை ஏற்படுமோ..?"என்று உனக்கு போன் செய்தேன். நீயோ உறுதியாய்.. "அதெல்லாம் ஒன்றும் ஆகாது. முதுகுவலி சரியாகிவிடும் திட்டமிட்ட நாளில் திருமணம் நடக்கும்" என்றாய். அப்போது தான் எனக்குப் புரிந்தது பெண்மையின் மனோபலம் .. பெண்மையின் நம்பிக்கை. அதோடு நிறுத்தாமல் "அப்படியே வலி குறையவில்லை என்றாலும் ரிசப்ஷன் கொஞ்ச நேரம் நின்று adjust பண்ணிக் கொள்ளுங்கள். அதன் பிறகு நான் பார்த்துக் கொள்கிறேன்" என்று சொல்லிவிட்டு இன்னும் எனக்கு எந்தச் சந்தேகமும் இருக்கக் கூடாதென்று.."டோண்ட் வொரி..ஐ கேன் வெயிட்" என்றாயே என் கண்ணம்மா..விம்மி விம்மி அழுதுவிட்டேன்.

இதோ... இன்று மாலை இக்கடிதத்தைக் கொடுத்துவிட்டு உன்னுடன் கைகோத்து நிற்கப்போகிறேன். வலியெல்லாம் போய்விட்டது..... அண்ட் யூ டோண்ட் ஹேவ் டு வெயிட்!

திருமண வரவேற்பு முடிந்ததும் பரிசுப் பொருட்களைப் புறந்தள்ளிவிட்டு இந்தக் கடிதத்தை நீ படிப்பாய் என்று தெரியும். இது இன்றைக்கான கடிதமன்று என்றைக்குமான கடிதம். புகைப்பட ஆல்பம் பார்ப்பது போல் பின்னொரு காலத்தில் நாமோ நம் பிள்ளைகளோ இக்கடிதத்தைப் படித்து ஒரு சிறு புன்னகை பூத்தோம் என்றால் நம் காதல் வென்றுவிட்டது என்று அர்த்தம்.

நாளை சீக்கிரம் எழ வேண்டும். படுத்துத் தூங்கிவிடு-------இன்றொரு இரவு!

இப்படிக்கு

உனது அன்புக் கணவன் (இதிலும் இரண்டு சுழி "ன" போட்டாலும் மூன்று சுழி "ண" போட்டாலும் நன்றாகப் பொருந்துகிறது தானே?)


______________________________________________________________

திடங்கொண்டு போராடு காதல் கடிதம் பரிசுப் போட்டிக்காக நான் எழுதிய காதல் கடிதம் இது. இதில் கலந்துகொள்ள எனக்கு ஊக்கமளித்த நண்பர்கள் திண்டுக்கல் தனபாலன் மற்றும் KG கௌதமன் இருவருக்கும் எனது நன்றி. இது எனது சொந்தப் படைப்பு என்று உறுதி அளிக்கிறேன்.

Saturday, July 6, 2013

சிறு பொன்மணி அசையும் - REMIX

உரல் குழவியும் சுழலும் அதில்

உழலும் பொருள் குழையும்

குழி மேவிடும் மாவது பூப் போல் மலரும்

விரல்கள் தொடவும் தொடரும் தடம் மாறாது

ராகம் தாளம் மாறிடாது ஆடும் கல்லும் பாடலோடு... (உரல் குழவியும்)


படியும் அரைப் படியும் எனக் கலந்தால் சரி விகிதம்

விடியும் வரை இருந்தால் புது மணமே உதயம்

படியும் அரைப் படியும் எனக் கலந்தால் சரி விகிதம்

விடியும் வரை இருந்தால் புது மணமே உதயம்

*அனலானது மஞ்சம் உடலானது பஞ்சும்

அனலானது மஞ்சம் உடலானது பஞ்சும்

சுவையும் எமைச் சுவையும் என அவையில் அவை கெஞ்சும்

விரல் என் வசம் விருந்துன் வசம் உருவாகிடும் பரவசமே (உரல் குழவியும்)
________________________________________

* அனலானது மஞ்சம் உடலானது பஞ்சும் - cotton-like soft Idlis getting baked in steam heat



Thursday, July 4, 2013

பக்கத்து வீட்டுக் குழந்தையின் பசியொலி

என் வீட்டுச் சுவரில் கசிந்தது

பக்கத்து வீட்டுக் குழந்தையின் பசியொலி..

ஏதோ ஒரு அலுவலக

வாஷ் பேசினில் கசிந்தது

அக்குழந்தை குடிக்காத பால்



Friday, June 21, 2013

இப்படி இருந்திருந்தால்

என்னிரு கரங்கள் கால்களாகவே இருந்திருந்தால்
உணவினை வாயில் திணித்திருக்க மாட்டேன்.
என் முதுகெலும்பு வளைந்தே இருந்திருந்தால்
இன்றெனது தலைக்குனிவு இயல்பாய் இருந்திருக்கும்.
நானசைத்து ஆட வாலொன்று இருந்திருந்தால்
வாளசைக்கும் விளையாட்டு ஆடியிருக்க மாட்டேன்.
எனக்கறிவு என்றும் ஐந்தாகவே இருந்திருந்தால்
பகுத்தறிவால் பைத்தியம் ஆகியிருக்க மாட்டேன்.
விலங்காக மட்டும் நான் இருந்திருந்தால்
விளங்காத பொருளாய் உலகை மாற்றியிருக்கமாட்டேன்

Monday, June 17, 2013

மனம்

வெற்றுத் தாள், வெறும் பாண்டம்,
வெறும் சாதம், வெற்று மரம்...
வெறும் மூளை கூட உண்டாம்.
வெற்றிடமாய் உலகில் எத்தனை
இருந்தாலும்
வெற்று மனம் என்று ஒன்று
இல்லாதது ஏன்?
ஏதோ ஒன்று நிறைந்திருந்தாலும்
நிறைந்த மனம் என்று ஒன்று
இல்லாதது ஏன்?

Saturday, June 15, 2013

செருப்பு


மிதித்தாலும் உதைத்தாலும்
உன் காலின் கீழ்க் கிடக்கிறேன்.
நீ கழற்றி விட்டாலும்
உனக்காகக் காத்துக் கிடக்கிறேன்

உன் வழியே என் வழி....
மலத்தின் மீது நீ நடந்தால்
நாறிப் போவது நான்...

உனது அன்புத் தெய்வங்களுக்கு
ஆகாது என்பதால்
உன் பூசை அறையில்
நான் இடம் கேட்பதில்லை.
வீட்டுக்கு உள்ளேனும் வையேன்..
வெளியில் நாய்கள் தொல்லை.

Friday, June 7, 2013

மழைக் காதலி

குடையின்றி நிற்கும்போது
திடீரென-
உன் கல கல சிரிப்பில்
எனை முழுவதும் நனைத்துப் போனாய்.

என் முரட்டு மேனியிலும் மயில் தோகையென
சிலிர்த்துக் கொண்டன மயிர்க் கால்கள்.
நீ வந்து போன நெடுநேரம் கழித்தும்
மீசையின் மீது ஒட்டிக் கிடந்தது
உன் முத்தம்.

ஒட்டிப் போன ஆடையில் ஒட்டிக்கொண்டு
பிரிக்க விடாமல் ஏன் பிடிவாதம்...?

ஒரு வழியாய் உடல் துடைத்து
புதுத் துணி அணிந்த போது
உடல் முழுதும் பூசிக் கிடந்தது
உன் ஸ்பரிசத்தின் தூய்மை.

Friday, May 31, 2013

மேற்கத்திய சிந்தனையும் தமிழ்ச் சிந்தனையும்


ஏழாம் வகுப்பு தமிழ் வீட்டுப் பாடத்துக்கு ஏதோ PhD thesis-க்கு மூளையைக் கசக்குவதுபோல் நானும் என் மகனும் தமிழ்ப் பழமொழிகளைத் தேடிக் கொண்டிருந்தோம். "ஆங்கிலப் பழமொழிகள் தெரிஞ்சாலும் சொல்லுடா.. தமிழில் மொழி பெயர்த்துக் கொள்ளலாம்" என்றேன்.

"Two Birds in One Stone" என்ற பழமொழி நினைவுக்கு வந்தது. அதற்கு இணையான தமிழ்ப் பழமொழியை ஏற்கனவே எழுதிவிட்டிருந்தோம்...... "ஒரே கல்லில் இரண்டு மாங்காய்".... கல் ஒன்றுதான் ஆனால் தமிழன் மாங்காயை அடிக்கிறான். ஆனால் வெள்ளைக்காரன் பறவையை அடிக்கிறான் என்ற வித்தியாசத்தை உணர்ந்த உடனே இந்தப் பதிவுக்கான கரு பிறந்து விட்டது!!

தமிழன் எவ்வளவு நல்லவன்? பிற உயிர்களுக்கு தீங்கு செய்ய நினைக்காதவன். வெள்ளைக்காரனுக்கு மட்டும் ஏன் பிற உயிர்களைக் கொல்லும் எண்ணம்? தமிழன் என்ற கர்வத்தில் காலரை உயர்த்திக் கொண்டிருக்கும் போதே வழக்கப்படி நமது technical மூளையும் வேலை செய்ய ஆரம்பித்து விட்டது. ஒரு பறவை மேல் படும் கல் இன்னொரு பறவை மேல் படுவதற்குள் அது உஷாராகி பறந்து விட வாய்ப்புள்ளது.(இந்தக் கதை நான் நமக்கு ஏற்கனவே தெரியுமே.. ஒரு மரத்தில் பத்து பறவைகள் இருந்தன.. வேடன் ஒரு பறவையை சுட்டான் ..மீதி எத்தனை பறவைகள் இருந்தன?.. விடை: எல்லாப் பறவைகளும் பறந்து விட்டன.) எனவே ஒரு கல்லில் இரு பறவைகளை அடிப்பதற்கான நிகழ்தகவு மிகவும் குறைவு. ஆனால் ஒரு மாங்காயை அடித்த கல் மேலும் ஒரு மாங்காயில் படுவதற்கு நிறைய வாய்ப்புள்ளது. விழுகின்ற மாங்காய் மேலும் ஒரு மாங்காயில் பட்டு அதுவும் விழ வாய்ப்புள்ளது. கல்லடியில் கிளையே குலுங்கி பல காய்கள் விழவும் வாய்ப்புள்ளது. தவிர மாங்காய்களுக்கு பறவைகள் போல உஷாராகத் தெரியாது. ( அதனால் தான் இவன் சரியான மாங்காய் என்கிறார்களோ?). இவற்றையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது தமிழனின் சிந்தனையே சிறந்தது என்று ஒப்புக் கொள்கிறீர்களா மக்களே?

சரி இன்னும் ஒரு உதாரணம் பார்ப்போம். வெள்ளைக்காரன் சொல்கிறான் "make hay while the sun shines". தமிழன் என்ன சொல்லுகிறான்? "காற்றுள்ள போதே தூற்றிக் கொள்". இப்போது என்னை சில பேர் மடக்க நினைக்கலாம். தமிழன் சோற்றைப் பற்றியே நினைக்கிறான். நெல்லைத் தூற்றி சாதம் வடித்து சாப்பிடுவதே அவன் நினைப்பு. ஆனால் வெள்ளைக்காரன் மாட்டுக்கு வைக்கோல் காயவைக்க நினைக்கிறான் எனவே அவன் சிந்தனையே சிறந்ததென்று சிலர் வாதிடலாம். இங்கு தான் நீங்கள் நன்றாகச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்... வெள்ளைக்காரன் மாட்டுக்கு ஏன் அக்கறையாக வைக்கோல் போடுகிறான்? அது கொழு கொழு என்றானதும் அதை வெட்டுவதற்கையா... வெட்டுவதற்கு..!

பி.கு. இது இன உணர்வைத்தூண்டும் கட்டுரை அல்ல. மொழியியலும் மொழி பேசும் மக்களின் வாழ்வியலும் பற்றிய ஒரு நடுநிலைமையான ஆராய்ச்சிக் கட்டுரையே. மேலும் பல உதாரணங்கள் என் உள்ளத்தில் கொட்டிக்கிடக்கின்றன விரித்து எழுத நேரமில்லை.

A bird in the hand is worth two in the bush. ( மரத்தில் இருக்கும் பலாக்காயை விட கையிலிருக்கும் களாக்காயே மேல்) கறி உணவு vs காய் உணவு

God helps those who help themselves ( மரத்தை வைத்தவன் தண்ணீர் ஊற்றுவான்). நாமே உதவி செய்து கொள்வதற்கு கடவுள் எதற்கு? நாம் மரம் போல் நின்றாலும் நமக்கு உதவி செய்வது கடவுளின் கடமையன்றோ? இதை சோம்பேறித்தனம் என்ற நோக்கில் பார்க்கக் கூடாது.. எது உண்மையான நம்பிக்கை - முழுமையான surrendering என்ற நோக்கில் பார்க்கவும்.

Birds of same feather flock together. (ஒரே குட்டையில் ஊறிய மட்டை). வெள்ளைகாரனின் நட்பு இனம் சார்ந்தது. நம் ஆட்களின் நட்பு இடம் சார்ந்தது. மட்டைகள் வெவ்வேறு இனமாக இருக்கலாம். ஆனால் அவற்றை இணைப்பது ஒரே குட்டை.

A friend in need is a friend in deed.(உடுக்கை இழந்தவன் கைபோல் ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு.).. வெள்ளைக்காரன் சொல்லும் நட்பு தேவையின் போது உதவுவது. நம் ஆட்களின் நட்பு அவிழும் ஆடையைப் பிடிக்கும் கைபோல் தேடி வந்து செய்யும் நட்பு....எது உயர்ந்ததென்று நீங்களே சொல்லுங்கள்..

Wednesday, May 22, 2013

கண்மணியே பேசு

நாளெலாம்...நகையும் துள்ளலும்
மழலையின் மகிழ்வும், காதலின் குழைவும்
செவிக்குத் தேனாகும் கண்மணி உன் பேச்சு.

கண்ணின் மொழியில் கள்ளூறும்
புதுமணப் பெண்ணுன்
புது வளைகளின் பெயரிலாப்
புதுமொழிகளும் புரிபடும் எனக்கு.

மெல்லினமும் வல்லினமும்
சரி விகிதமாய் சதிராடும்
ஜதி பழகிடும்
உன் உடல்மொழியில்.

உணர்வழிந்து உறங்கிக் கிடக்கையிலும்
இரவு முழுதும்
கதை கதையாய்ச் சொல்லும்
காதோரம் உன் சுவாசக் காற்று

Friday, May 17, 2013

திருமண நிச்சயதார்த்தம் - வாழ்த்து


அவள் அவனவள் என்று ஆனாள்

ஆனால் ஆணால் கணவனாவது

கனவினில் மட்டுமே இன்னும் சிலநாள்

இன்று திருமணம் திண்ணமானது

வருமே திருமண தினமானது

அதன் பின் இணைமானது இனமாகுமே

உன் இனமானது இன்னும் ஆகுமே!

வாழ்க வளர்க!     பி.கு : நண்பர் ஒருவரின் மணஉறுதி விழாவுக்கு எழுதிய குறுமடல்

வெயிட்

சமீபத்தில் மருத்துவரிடம் சென்றபோது... நர்ஸ் எனது file-ஐ எடுத்து எழுதினார்..

நர்ஸ்: சார் உங்க ஏஜ்?

நான்: (மெதுவான குரலில்) "....."

நர்ஸ்: fever இருக்கா?

நான்: இல்லம்மா. வெறும் கோல்ட் மட்டும்தான்

நர்ஸ்: (வேயிங் மிசினைக் காண்பித்து) வெயிட் போடுங்கள் சார்.

நான்: என்னம்மா டாக்டர் ஆபிஸ்ல இருந்துட்டு வெயிட் போட சொல்றீங்களே..? வெயிட் போட வேணாம்னு சொல்லுங்கம்மா..!

நர்ஸ்: ஐயோ...... நீங்க வெயிட் போட வேணாம் இந்த வேயிங் மிசின் மேல ஏறி நில்லுங்க...!

Thursday, May 9, 2013

பிரிவாற்றாமை


கொஞ்சி முத்தமிட
குழந்தைகளும் கூட இல்லை
நெஞ்சு மேல் நடை பயிலும்
பிஞ்சுக் கால்கள் இங்கு இல்லை
கஞ்சித் தண்ணி ஊத்திவிட
உன் கைக்கரண்டி இங்கு இல்லை
சர்க்கரை இருக்குதடி சகியே
கரும்புக்கழி நீயில்லையே
உன் சங்கேத பாஷை போல
இங்கே சங்கீதம் இனிக்கலையே
பஞ்சு மெத்தையிலே படுத்தால்
பக்கத்திலே நீயில்லையே
நஞ்சு போல் போகுதடி நேரம்
என்னைத் துருப்பிடிக்க வைக்குது இந்த தூரம்

Friday, April 26, 2013

இவனுக்கு என்ன வந்தது?

வாகனத்தில் செல்பவனுக்கு
எருமை வாகனன் இருப்பதை
பாதை நடுவில் திறந்த
பாதாள சாக்கடையில்
கிளை நட்டுக் காட்ட
பாதையோரம் நடக்கும்
பாதசாரிக்கு ஏன் தோன்றியது?

Thursday, April 18, 2013

திருமண நாள்

எனது திருமண நாளன்று (மார்ச் 8) எழுதியது:
-----------------------------------------------------------------

எங்கிருந்தோ வந்தாள்
இனி உன் பெண்சாதி நான் என்றாள்
இங்கிவளை யான் பெறவே
என்ன தவம் செய்து விட்டேன்..

இன்றுடன் ஆண்டுகள் ஆயின பதினைந்து

நன்றி சொல்ல நூறுண்டு
இன்று சொல்வேன் ஒன்று
நன்றி.
என் சிறு குறைகள் திருத்தி
என் பெருங்குறைகள் பொறுப்பதற்கு. 

பொய்யெல்லாம் உனதே

நள்ளிரவில் களுக்கென்று சிரித்து
"ஒன்றுமில்லையம்மா கனவு" என்றாய்
சந்தேகப் படும் தங்கையிடம்
"வெறும் friend டீ" என்றாய்
அக்கா பெண்ணுக்கு முத்தமிட்டு
"என் செல்லம்" என்றாய்
என்னிடம் சொல்கிறாய்
"இதெல்லாம் தப்பு"
நம் காதலில்-
பொய்யெல்லாம் உனதே

கானல் நீரான காதல்

கானல் நீரான காதல் என்
கண்ணில் நீரானதோ..?
தெய்வங்கள் தடுத்த காதலின் பெயர் தான்
தெய்வீகக் காதலோ?
சொல்லடி பெண்ணே சொல் இந்தச்
சொல்லடி ஏனடி சொல் ?
செல்லடி பெண்ணே செல்
என் செல்களை அழித்தே செல்

இன்னும் எழுதாத வரிகள்

இன்னும் எழுதாத வரிகள்-
தெரிந்தன-
சிந்திக்கும்
நெற்றிச் சுருக்கங்களில்

தாத்தா

என்னைக் கொஞ்சுவதாய்
தன் மகனையும் கொஞ்சினார்-
தாத்தா
என்னை
"டேய்..ராஜாக் குட்டி"
என்றழைக்கையில்.

மகளுடன் உரையாடல்

மகள்: அப்பா பட்டாம்பூச்சியை மீனா வண்ணத்துப்பூச்சின்னு சொல்லுறா..

நான்: சொல்லலாமே..வண்ணம்னா கலர் தெரியுமில்ல?

மகள்: தெரியும்

நான்: பட்டாம்பூச்சி கலர் கலரா இருக்கறதனால வண்ணத்துப்பூச்சின்னும் சொல்லலாம்

மகள்: அப்ப வானவில்ல வண்ணவில்லுன்னு சொல்லலாமா?

நான்: சொல்லலாம். ஆனா அது வானத்துல இருக்கறதனால வானவில்லுனு சொல்லுறோம்

மகள்: அப்ப வண்ண வானவில்லுனு சொல்லலாமில்ல..

நான்: சொல்லலாமே... !

ஆணுக்கும் கற்புண்டு

அழகில், காதலில்
அன்பில், தாய்மையில்,
தூய்மையில், கற்பில்
என்றும் பெண்ணுக்கே உலகில் முதன்மை
எனினும் ஆணின்றி ஏதிங்கு முழுமை?
உலகிலுண்டோ..
ஒரு துருவக் காந்தம்?

இதுவும் யாகமே

அடைமழை நாளில்
அடம்பிடித்த அடுப்பில்
ஆக்சிஜனைக் குழலூதி
புகையில் மூச்சிழுத்து
எமக்கு அன்னம் படைக்க
அக்னி வளர்த்து
அன்னை செய்ததும் யாகமே

உன் கண் முள்

என் வெற்றுப் பாதங்களைத்
குத்தித் தைத்தன
நாணிக் குனிந்த
உன் விழி முட்கள்--

என் மேனியெங்கும்
அக்குபஞ்சர் செய்தன
நாணம் நீங்கிய
உன் கூரிய பார்வைகள் !

குறுங்கவிதை

குனிந்த தலையை
சற்று நிமிர்த்தினேன்.
பரந்து விரிந்தது உலகம்.

அடங்குதல் ஆரிருள் உய்த்து விடும்

நண்பா-
உன்னிலடங்கியவை
எண்ணிலடங்காதவை.

உயிருள்ள உனக்கு
ஏன் அடக்கம்?

அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்குதல்
ஆரிருள் உய்த்து விடும்.

Friday, February 1, 2013

களை

அழகுக்கு வளர்த்த புல்வெளியில்

களையென்று பிடுங்கினாள்
.
.
.
நெற்பயிர்



Bench at the Beach


1. Sea:


இரைதேடிச் சிறகசைக்கும்
கடற்பறவைகள் இல்லை.

இறகின்றிச் சிறகடிக்கும்
சிறு மழலைகள் இல்லை.

உடல் ஒட்டிய மணல் உதிர்க்கும்
உயிர்க் காதலர் யாரும் இல்லை

நிழற்படமாய் நின்றுவிட்டது
அலை நிறுத்திய கடல்.


2. Bench:

இரைதேடிச் சிறகசைக்கும்
கடற்பறவைகள் இல்லை.

இறகின்றிச் சிறகடிக்கும்
சிறு மழலைகள் இல்லை.

உடல் ஒட்டிய மணல் உதிர்க்கும்
உயிர்க் காதலர் யாரும் இல்லை

தனிமரமாய் நின்றுவிட்டேன்.
கடலாட முடியாது
முடமான என் கால்கள்.

நின்று-
ஒரு துளியால் எனை நனைக்குமா
ஓடும் மேகம்?

பந்துமுனைப் பேனா

மையிட்ட கண்ணின் சுழற்சியாய்


கவிதை எழுதியது - என்


பந்துமுனைப் பேனா



Saturday, January 19, 2013

விடியலின் பிறகும் வெண்ணிலா

1.
மழலைக்கு சோறூட்ட காலையிலும் என்னை
எங்கேனும் ஓர் அன்னை தேடுகிறாளோ?
தேடிப் பார்த்தது -
விடியலின் பிறகும் வெண்ணிலா

________________________________________________

2.
காலைக் கதிரில் கன்னம் வெளுத்து
வெட்கச் சிவப்பு மறைந்தது.....
இரவின் இனிமை -
இன்றும் வரும் என்றாலும்....
பிரியா விடைபெற
பிரியத்துடன் பூமியை நோக்கியது
வேலைக்குப் புறப்படும்
கணவனை ரசிக்கும் மனைவிபோல்
விடியலின் பிறகும் வெண்ணிலா



Thursday, January 3, 2013

லிமரிக் - மங்கை

பொன் வண்டாடவே மலர்ப் பொய்கை
ஆண் திண்டாடவே மாதர் செய்கை
        வங்கமாக் கடலலை போல் பிடிவாதம்
        தங்கமாய் காகிதத்தை மாற்றும் இரசவாதம்
மங்கை கண்ணசைவில் செய்யும் சைகை